நீ பிறந்து வளருங்கால்
உலகைப் பற்றி நீ அறியும் முன்னரே
தீமை செய்யவே பிறந்த ஒரு பிராணியாக
உன்னை முறைத்தார்களே!
சீ சீ என்று கண்டிப்பும்
உன் குழந்தைமையில் தொடர்ந்தால்
உன் புட்டத்தில் சுளீர்ர் என்று அடியும்
வீல் என்று அழுங்கால்
தப்பு செய்யக் கூடாது என்ன ...
என்று உன்னைக் குற்றவாளியாக்கிய
உலகத்திடமிருந்து தப்பி எப்படி மீறி வந்தாய்?
வளருங்கால் அது என்ன இது என்ன என்று
நீ கேட்கும் அறியத்துடிக்கும் வினாக்களுக்குப்
பதிலாகப் புராணக் குப்பைகளை
உன் மூளையைத் திறந்து
அதில் போட்டு அடைத்தார்களே
அதையும் மீறி நீ எப்படி வந்தாய்?
வளருங்கால் அத்தனைப் பிசாசுகளோடும்
தீய சக்திகளோடும் கூட்டாளியாக
உன்னை இணைத்துப் பேசி
முளையிலேயே கிள்ளிவிடத் துடித்தார்களே
அதையெல்லாம்
நீ எப்படி மீறி வந்தாய்?
சனியனே நாயே பேயே
வந்து வாச்சிருக்குப் பாரு
கர்ம வினை
போறாத காலம்
செத்துத் தொலை
உலகத்திற்கு கேடு
உருவெடுத்த அவமானம்
ஓராயிரம் சொல்லைப் பழுக்கக் காய்ச்சிக்
கோபக் குடத்தில் கொதிநிலையில்
உன் இதயத்தின் முகம் தோலுரிய தோலுரிய
வாரி வாரிக் கொட்டினார்களே
உன் முன்னால் உன் பின்னால்
உன்னைச் சுற்றி
உன்னைச் சூழ்ந்து
ஏன்...உனக்குள்ளே
இருந்து கொண்டு எங்கும் போக முடியாமல்
வளைத்து வார்த்தையால்
குரோதம் பொங்கும் விழியால்
கொலை கெஞ்சும் கரத்தால்
தங்கள் சினத்தின் தினவு தீர்ந்தார்களே!
ஐயோ பாவி! அதையெல்லாம் மீறி
எப்படி நீ வந்தாய்?
இப்பிறவியில் இன்று இவர்கள்
கொண்ட சின வெறி போதாதென்று
மூண்ட சினம் முத்திய விழிகள் எரிய
ஆண்டவன் என்றும், கடவுள் என்றும்,
ஆதி காலக் கோபத் தெய்வக் கோல வெறி என்றும்
ஆள் வைத்து
எதிர்காலம் முழுதும் உன்னைப் பிய்த்தெடுக்க
நரகமென்றும், யமனென்றும்
நட்ட கல்லில் கட்டி வைத்த
தீரா வெறுப்புகளை எல்லாம்
எப்படி... எப்படி...எப்படித்தான்.. மீறி...
அதையெல்லாம் விடக் கொடுமை
உன்னையே நீ வெறுக்க
உன்னையே நீ அருவருக்க
உன்னையே நீ தொலைத்துவிடத் துடிக்க
உன்னையே பயிற்றுவிக்கும் கேந்திரங்கள்
உன்னை முறிக்க உன் கையால்
உன் உள இயலால்
சிதைத்து வைத்த சூழ்ச்சிகள்
எத்தனை... எத்தனை ....
அத்தனையும் மீறி ... !
மனிதமே நீ வாழி!
***
மனிதமே நீ வாழி!
***
No comments:
Post a Comment