கணக்கிலவாய்ச் சப்திக்கின்றன;
ஏனென்று தெரியாத ஓர் ஏக்கம்
அவற்றின் குரல்களில்
எனக்கு மட்டும் கேட்கிறது;
காகமாய் இருந்து நான்
ஆறுதல் சொல்லக்
கற்றேனில்லை கூடுபாயும் வித்தை;
ஒரு வேளை காகங்களின் கேலிக் குரலோ?
என் உளத்தின் எதிரொலியில்
ஏக்கச் சாயம் பூசியதோ?
போக்கற்ற வழிப்போக்கன் முனகுவதாய்ச்
சிலசமயம் காக்கைகள் கழறும்;
கலி முற்றிப் போயிற்றென்று
அடித்துக்கொண்டு அங்கலாய்க்கும் ஒன்று;
காதலித்த பெண்ணாள்
கைவிட்ட காமுகனாய்க் கரையும் ஒன்று;
கடவுள் சந்நிதாநத்தில்
கள்ளம் உருகக்
கீதம் இசைப்பதுவாய் ஒரு காகம்;
ககன வெளியெங்கும் பறந்து
காணாத ரகசியத்தைக் கண்டு
விண்டு ஒலிப்பதுவாய் ஒரு வித்தகம்;
காலித்தனத்தை ஓடஓட விரட்டுவதாய்
ஒரு பெண் சீற்றம்;
போலித் தனத்தைக் கிழிப்பதுபோல்
ஒரு செத்த எலி உடலின் பாடம்;
மரக்கிளையில், மதகுகளில்,
மாடிகளில், மாலை நேரம்
கூடடையும் கோதுகலத்தில்,
ரயில் வண்டி நிலையங்களில்,
ஆற்றோரம், வீதிகளில்
அகலக் கைபரப்பி விரிந்த டவர்களில்,
கோபுரத்தில், கொலுவீற்ற மண்டபத்தில்,
கருவாட்டுக் கூடைகளின்
ஆலவட்ட அண்மைகளில்,
சேலோடும் விழிகளில்
சிவந்தோடும் நாணப்புன் நகையாரொப்பக்
கடைக்கண் வீசி எக்களிக்கும் இறுமாப்பில்,
இருட்பால் திரிந்தெங்கும் இறகு விரித்ததெனக்
கருப்பால் மிளிரும் கூரலகுக் கானவளம்
மறுக்கின்ற காதுகளின் ஓரங்களில்,
தம்மினத்தின் இறப்பொன்றில்
தாம் கூடி ஓலமிடும் துயர்க் குழுவில்,
எங்கெங்கோ திரிந்து
இதுவரையில் காத்திட்ட தன்னுயிரை
இயலாமல் விட்டதுவோ,
மின் சுட்டு விழுந்ததுவோ,
புன்மைக் கவட்டைக் கல்
புட்டத்தில் பட்டதனால்
பட்டுப் போய்விட்டதுவோ,
ஏனென்று தெரியாமல்
ஏதும் பொருள் புரியாமல்
ஏக்கப் பார்வையொன்றை
இறக்குங்கால் வாக்குமூலம்
ஆக்கிவிட்டு ஆதிமூலம்
நோக்கிடவே நடுரோட்டில்
போக்கறியாக் காக்கையொன்றின்
பொன்னுடலம் என்விழிநீரில்;
சமன் செய்த செங்கோலாய்ச்
சென்றுவிட்ட டயர் ஒன்றின்
அச்சைச் சுமந்தபடி
அய்யோவெனக் கிடக்கும் அக்காக்கை;
குறையோ முறையோவெனக்
கூடியினம் அரற்றியபின்
கரையா விதி கிழிக்கவொண்ணாக்
கூரலகின் வண்ணவுடல்;
விதியின் வழித்தடத்தில்
விரையும் வினைவண்டி
அரைத்துப் பொடியாக்கியதில்
அங்காந்து கிடக்கின்ற சீவன் நானொருவன்;
வெங்காந்த அருளுக்கு
வேகாத வேதாந்த
வாயாடிப் போய் வீழ்ந்த
வீணன் எனை விடவும்
வித்தகக் காக்கை மேலென்று
விட்டுவந்தேன் இருசொட்டு.
***
No comments:
Post a Comment