கிருஷ்ணா நீ யார்?
குழந்தை என்பார் முதியவர்;
மூத்தவன் என்பார் குழந்தைகள்;
இடையன் என்பார் அரசர்கள்;
அரசன் என்பார் இடையர்கள்;
ஆண்டி என்பார் கஞ்சர்கள்;
திருவுக்கும் திரு என்பார் வேதியர்;
அரு என்பார் யோகியர்;
அருளின் உரு என்பார் ஞானியர்;
செயலின் கரு என்பார் கர்மடர்;
புயலின் நிறம் என்பார் புண்ணியர்;
பூசையின் அறம் என்பார் திண்ணியர்;
ஆசையின் புகல் என்பார் விண்ணியர்;
அமுதக் கடல் என்பார் பூசுரர்;
குமுதக் கதிர் என்பார் காதலர்;
கொடிய புதிர் என்பார் விரகிகள்;
முடிவில் கதி என்பார் விரதிகள்;
ஒடியும் நடன் என்பார் விடலைகள்;
அடிகள் சரண் என்பார் அபலைகள்;
நடிப்பின் திறன் என்பார் நாயகர்;
படிப்பின் பயன் என்பார் பாவலர்;
தவத்தின் நிறை என்பார் தவசியர்;
அவத்தின் பிழை என்பார் புல்லியர்;
திவத்தின் கண் என்பார் அந்தணர்;
பவத்தின் புணை என்பார் புங்கவர்;
யுகத்தின் உளம் என்பார் சோதிடர்;
அகத்தில் யுகளம் என்பார் மாதவர்;
அன்பில் நான் நீயே என்பார் பத்தர்கள்;
அறிவில் அடிமை என்பார் முத்தர்கள்;
பொறிகள் மேயும் உலகு என்பார் போகிகள்;
உறிநெய் யுண்ணக் காண்பார் யோகிகள்;
மேய்க்குமுனை நாடியேங்கும் கறவைகள்;
ஏய்க்குமென்னை வளைக்குமுந்தன் கருணைகள்;
ஆய்க்குலத்தில் திரியவரும் அமரர்க்கரிய திருவடிகள்;
ஓய்வறியா பிறவிச்சுழல் உள்ளடங்கும் திருவடிகள்;
தாயறியா தாய்தேடித் தாம்வரும்சீர்த் தளரடிகள்;
போயறியா மாயைதான் பொன்றவரும் பொன்னடிகள்;
ஆயர்குலச் சீயம்
அண்டர்குல நேயம்
வேய்ங்குழலின் விரகம்
பாய்ந்துவரும் குழகம்
ஐயா நீ யாரோ?
அறிவரேதாம் அறிவாரோ?
மையாயிவ் வுலக இருள்
பொய்யாய் உனைக் காட்ட
உய்யும்வழி அறியேன்
உன்மத்தமாய் ஆனேன்
கையில் உனை அள்ளிக்
கொஞ்சவும் யான் பயந்தேன்;
பையரவில் துயில்வோய்
பார்மீதும் நடை பயில்வோய்
ஐயா உனைக் கெஞ்சிக்
கேட்பேன் ஓருதவி
நீ யாரோ? எவர்தாம் அறிவாரோ?
உனை அள்ளிக் கொஞ்சத்
தடையாகி நின்ற
அறிவெதுவும் வேண்டாம்
எனக்கே அறியாமை போதும்
உறியடித்த வெண்ணை
ஒரு சிறிதும் வேண்டும்.
***
No comments:
Post a Comment