இதயத்தில் ஒரு மாடு
இங்குமங்கும் அசைகிறது
உதயம் வருமுன்னே உதிரிப் புல்மேய
உள்ளம் சுவற உராய்கிறது
உள்ளே செல்ல
உந்திக் கிளர்ந்து
வெளிவர முந்தி வளைத்த
உணர்ச்சி விலாவில்
முட்டும் கொம்பில்
உரசி நின்றே உமிழ்நீர் சுரக்க
ஆற்றி அரிப்பைத் தேய்க்கிறது
திறந்து விடத்தான் வேண்டும்
தினவடங்க தினகரன் வருமுன்னே
கரந்து நின்ற கதவம்
தாள் கொளுவி திறந்துவிடத்
தானே வந்துவிடும்
தட்டி தடுத்து நின்றால் தலைப்பாய்ச்சல்
மஹா என முழக்கி
மந்தைப் பிரசை எழுப்பும்
மோனக் கூப்பாடு
மந்திரமாய்த் தானொலிக்க
ஊனச்செவி தூங்கி
உட்செவி புலரியெழத்
தினவு தீரட்டும்
திறந்துவிடத்தான் வேண்டும்
உள்ளே சென்றிடவோ
வெளியே வந்திடவோ
ஓலத்தின் உள்ளாழம்
ஊரை எழுப்புமுன்னே
மந்தையில் எண்ணிக்கை
ஒன்று குறையுதென்று
சிந்தைச் சுடரேந்திச்
சிதாகாச வீதியெல்லாம்
காலச் சந்துகளில்
குரலெழுப்பி நான் என்றே
கோல்கை தாம்பாரக்
கூவிவந்து ஓராயன்
கொட்டிலில் அடைக்குமுன்னே
குலவு கருத்திலொரு
கவிஞன் எழுதிவைக்கக்
காலம் அதையுண்டு
கருவுயிர்த்த இதயத்தில் ஒரு மாடு
***
No comments:
Post a Comment