Sunday, October 31, 2021

பொற்சேவல்

நள்ளிரவு பன்னிரண்டு 
தூங்காத விண்மீன்கள் இமைத் துணையாய் 
மேல்மாடிக் காரை படுத்தயர்ந்த நிசப்தத்தில் 
தெருக்கோடிக் குழந்தை தேம்பும் ஒலித்தெளிவில் 
திப்பி பிதிர்ந்து இருள் புரளும் ஒளிக்கீற்றும் 
ஓய்ந்துறங்கும் உள்ளிரவின் மடியேந்தி 
உரத்த குரலாய் ஆர்த்த இதயத் துடிப்பு 
உட்செவி சாய்ந்து உயிரில் கனவேறி 
வெளியில் இவர்ந்து வந்த பதிவிறக்கிக் 
கொட்டிக் கவிழ்த்துக் கிளறிப் புரட்டிக் 
கூடாக் கூட்டில் கொண்டு புலர்த்திச் 
சிறுசிறு கனவுத் தூள்கள் உருட்டி 
இருளின் மடி கனத்த கடையாமம் 
உயிரூற உணர்வெழுந்து உரத்த விழிப்பில் 
ஊர்துயின்ற தாலாட்டில் ஊறிவரும் 
காற்றின் முதுகேறிக் 
கொள்ளிடத்துப் படித்துறையில் 
கொண்டு சுழித்தோடிவரும் 
குளிநீர் குடைந்தாடி 
வெள்வரைப்பின் முன்னெழுந்த ஊரசைவில் 
பட்டுவிடாது பாங்காய்த் திரும்பிவர 
நின்றேனை நீளுலகு 
நின்றறியக் கூவிடுமால் 
பொற்சேவல் 

***

No comments:

Post a Comment