Wednesday, January 29, 2020

அழகும் இன்பும்

விரிந்த இதழ் மணம் வீச
விரைநறுந்தேன் தான் பூசச்
சொரிந்தநகைப் பூவுதிர்த்துச்
சுகமஞ்சம் ஆக்கிவைத்தாய்

சுகமஞ்சக் கால்தாங்கும்
சொக்கணையில் சுரும்பாடும்
புகநாடும் அகவண்டு
பூவிரியத் தேனுண்டு

குகையெங்கும் கொள்ளையின்பப்
புதைபொருளாய்ப் பூரிக்கும்
மிகைநடுக்கும் உட்சுழலில்
அகப்பட்ட உயிர்தழைக்கும்

உயிர்தழையும் சேதியினை
ஊதிவரும் களிவண்டு
அயிர்க்கும் உளப்போதலர்த்தி
அடிக்காம்பில் தேன்சிலிர்க்கும்

தேன்சிட்டு தானழைக்க
வான் தொட்டு முத்தமிடும்
கானுக்குள் கன்னிமலை
கம்பலையில் களியாடும்

அம்பலத்தில் ஆடுகின்ற
ஆதிதாளம் அகத்தாழம்
செம்புலத்தில் பெயல்நாடிச்
சீவப்புலம் சிவிறியெழும்.

சுபமாய்ப் பிறந்த எழில்
சுந்தரமாய்த் தான் வளரும்
தவமாய்த் தன் வாழ்வாகித்
திசையெங்கும் நாடியெழும்.

***

No comments:

Post a Comment