ஏதேதோ தெரிகிறது
சன்னமாய் ஸம்ஸாரச்
சாகசங்கள் புரிகிறது.
எண்ணமாய் வடித்தெடுக்க
எழுதுகோலும் துடிக்கிறது
கிண்ணமாய் நிறைத்து வைக்கக்
கிறங்கவே அடிக்கிறது
பண்ணாய்ப் பிசைந்து வைத்த
பாஆடை விலக்கியதில்
உள்ளர்த்தம் உணர்ந்தது போல்
ஒரு மௌனம் உதிக்கிறது
வண்டிகளை விட்டு
வழித்தடங்கள் விலகிடினும்
வாழ்க்கை முற்றும் பயணிக்கும்
வாஞ்சையோ விரைகிறது
விடியல் புலர்கிறது
வீதிவழி போகின்ற
விரியிருளின் வகிடொற்றிப்
பொட்டுவைத்த மஞ்சள்
பொன்னாய்க் கரைகிறது
பகலாய்ச் சலித்தெடுத்துப்
பக்குவமாய்த் தேனிழைத்துச்
சூக்குமத்தில் தொட்டுவைத்த
சாயங்கால மயக்கத்தில்
வேய்ங்குழலில் கேளாத
விதிகீதம் மலர்கிறது.
என்றெல்லாம் பாவினத்தின்
பண்ணத்தித் தூபிகளில்
எண்ணத்தின் சிவத் தீயை
ஏற்றிவிடும் பொறுப்புண்டு.
இருந்தாலும்.....
பொழுது விடிந்தவுடன்
பொருளேதோ வாங்குதற்குப்
புறப்பட்டுப் போய்விட்டேன்
படுபாவி போட்ட கணக்கினிலே
என்கணக்கு உதைத்திடவே
உள்ளதொரு வித்யாசம்
என்றுரைத்தேன் ...
ஒருபக்கம் கூட்டிவந்தால்
ஒன்றதிகம் ஆகிறது.
மறுபக்கம் திரும்பிவந்தால்
இல்லாமல் போகிறது
ஆனாலும் வித்யாசம் ஏதோ
இருக்கத்தான் செய்கிறது.
வித்யாசம் இல்லையெனில்
விதியின் ஆயாசம்தானே மிஞ்சும் ?
கவிதைக்கும் கணக்குக்கும்
வித்யாசம் பார்த்துப் பார்த்துப்
பசியோ எடுக்கிறது;
பைங்கூழை வேட்கிறது.
பக்கச் சுவை கடிக்கப்
பச்சை ஊழ்தான் என்றாலும்
பசியோ எடுக்கிறது;
பைங்கூழை வேட்கிறது.
***
No comments:
Post a Comment