Friday, February 26, 2016

ஓர் எழுகூற்றிருக்கை

ஒன்றான இருமனங்கள்
முக்காலும் நானிலத்தில்
ஐம்பூத சாட்சியாக
அறிவொன்றே ஆறாக
எழுகின்ற இல்வேட்டு
ஆறாத காதல் சொரிந்து
ஐம்புலனும் சங்கமிக்க
நாற்பொருளில் முப்பொருளை
இருநிலத்து எய்திய
இறும்பூதில் ஒன்றாகக்
காண்கின்ற காட்சியில்
மாணுயர் மங்களம் வாழி வாழி ! 

தேனான வாழ்வினில்
திகட்டாத மின்னலாய்
ஆறாத அமுதத்துள்
குமிழிடும் களிப்புனல்
உமிழ்போதக் குடுமியில்
முதிராநல் அழகாய்த்
தமிழ்வேத நிலவாய்த்
தவழ்ந்திடும் உவகையில்
துளிர்த்திடும் மழலையில்
மிழற்றிடும் மங்களம் வாழி வாழி ! 

வாழ்வுக்குள் வனைந்திடும்
வண்ண அருவங்கள்
எண்ணத்தில் ஒலித்திடும்
மௌனத்தின் நாவுகள்
சொல்லுக்குள் சத்தத்தின்
நிழல்படாப் பிரதேசம்
உள்ளுக்குள் தித்திக்கும்
உயிர்படர்ந்த நேசம்
மதுவாரும் மொட்டலரும்
பூவின் புனர்ஜன்மம்
கட்டெழிலில் கால்பாவாக்
கரையற்ற போகம் 
விண்ணாகி நிலவாகி
விரிகதிர் ஒளியாகி
மண்ணாகி விதையாகி
மறிகடல் ஏழுமாகிப்
பெண்ணாகி நின்றதும்
ஆணாகி வந்ததும்
எண்ணாகி நின்றெண்ணில்
எண்ணா தியன்ற
ஒன்றாக நிலைத்திடும்
ஓர் மங்களம் வாழி வாழி ! 

***

No comments:

Post a Comment